Saturday, May 5, 2018

மண்ணுலகே சொர்க்கம் - நினைவுகள் நனவுகள் கனவுகள்

1. 



மண்ணுலகே சொர்க்கம்!
சந்திரன் சூரியனுக்கு அப்பால்
எத்தனை எத்தனை
நட்சத்திரங்கள்!
அண்டம் பிரபஞ்சம்
பால்வெளியெல்லாம்
எவ்வளவு பெரியவை!
எவ்வளவு பெரிய பிரபஞ்சம்!
எவ்வளவு பெரிய சூரிய மண்டலம்!
இந்த பூமியைத்தவிர
வேறெங்கேனும் உயிர்கள் உள்ளனவா என்று
தேடிக்கொண்டே இருக்கிறார்கள்!
இதுவரை இந்த பூமியைத்தவிர
எங்கும் உயிர்கள் உள்ளதாக
எதுவும் கண்டறியப்படவில்லை!
இந்த பூமியில்தான்
எவ்வளவு உயிர்கள்?
ஓரறிவு முதல் ஆறறிவு வரை
எவ்வளவு உயிர்கள்?
ஓரறிவு என்ற மெய்மட்டும் கொண்ட
மரம், செடி, கொடி, புல், பூண்டு போன்ற
தாவர இனங்கள்;
ஈரறிவு என்ற மெய் வாய் கொண்டு
நத்தை, சங்கு போன்ற உயிரினங்கள்,
மூவறிவு என்ற மெய்வாய்நாசி கொண்ட
எறும்பு, கரையான், அட்டை போன்ற உயிரினங்கள்,
நாலறிவு என்ற மெய்வாய்நாசிகண் கொண்ட
நண்டு, தும்பி, வண்டு போன்ற உயிரினங்கள்,
ஐயறிவு என்ற மெய் வாய் நாசி கண் காது கொண்ட
விலங்குகள், பறவைகள்;
ஆறறிவு என்ற மெய் வாய் நாசி கண் காது
பகுத்தறிவு கொண்ட மனிதர்கள் என
எத்தனை கோடி உயினங்கள்!
இவையனைத்தும் வாழ
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
என்னும் பஞ்சபூதங்களும்
பூமியைத்தவிர வேறெங்கு
சரியாக அமைந்துள்ளன?
ஆதலால் பூமியில் பிறப்பெடுத்தது
எவ்வளவு பெரிய பாக்கியம்?
இந்த பூமியிலும்
ஓரறிவு முதல் ஆறறிவு
வரையான உயிரினங்களில்
ஆறறிவு மனிதனாகப் பிறந்தது
எவ்வளவு பெரிய பாக்கியம்?
ஆறறிவு மனிதனாகப்பிறந்து
ஐம்புலன்களும் நலமாய் பிறப்பது
எவ்வளவு பெரிய பாக்கியம்?
ஐம்புலனும் நலமாய் அமைந்து
ஆறாதது அறிவும் இருப்பது
எவ்வளவு பெரிய பாக்கியம்?
ஐம்புலனோடு ஆறறிவுகொண்டு
அன்பு, பண்பு, அறிவு, ஆற்றல், திறமை கொண்ட
நற்குண மானுடனாய் வாழ்வது
எவ்வளவு பெரிய பாக்கியம்?
நமது பிறப்பின் அருமை உணர்ந்து
இப்பிறப்பை நற்பிறப்பாக்கிக்கொள்வது
நமது கடமையாகும்!
அதுவே நம்மை படைத்த இயற்கைக்கு
நாம் செய்யும் நன்றியாகும்!
இப்பூமியில் வாழ்வதில்தான்
எவ்வளவு எவ்வளவு ஆனந்தம்?
காணும் மலர் அழகு!
மலரில் அமரும் வண்ணத்துப்பூச்சி அழகு!
பூச்சி பறக்கும் வானம் அழகு!
வானில் தோன்றும் சந்திர சூரிய தாரகைகள் அழகு!
சந்திரன் தரும் குளிர்ச்சி அழகு!
சூரியன் தரும் வெளிச்சம் அழகு!
வெளிச்சத்தில் தெரியும் மலை அழகு!
மலையில் கொட்டும் அருவி அழகு!
அருவி ஆறாய் இறங்கி ஓடுவது அழகு!
ஆறு கடலில் கலப்பது அழகு!
அந்த கடல் அலையாய் ஆர்ப்பரிப்பது அழகு!
அலையில் திரியும் மீன் அழகு!
மீனைக்கொத்தும் பறவை அழகு!
பறவை பாடும் பாட்டு அழகு!
பாட்டில் சேரும் இசை அழகு!
இசையில் சேரும் காற்று அழகு!
காற்றில் வரும் மேகம் அழகு!
மேகம் பொழியும் மழை அழகு!
மழையால் ஓடும் நீர் அழகு!
அந்த நீரில் விடும் படகு அழகு!
படகில் செல்லும் மழலை அழகு!
மழலையை கொஞ்சும் தாய் அழகு!
தாயின் தாய்மை பேரழகு!
தாய்மையில் மலரும் உலகத்தில்
வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் அழகுதான்!
இவ்வளவு அழகு நிறைந்த உலகில்
வாழும் பாக்கியம் பெற்ற நாமெல்லாம்
எவ்வளவு பெரிய பாக்கியவான்கள்!
அதனால்தானே பாடுகிறார்கள்:
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை!
பூமிக்கு கண்ணீர் சொந்தமில்லை என்று!
இவ்வளவு ஆனந்தம் தரும்
அழகான உலகத்தைவிட
வேறு சொர்க்கம் ஏது?
மண்ணுலகே சொர்க்கந்தான்!
மகிழ்வாக வாழ்ந்தால்
மண்ணுலகே சொர்க்கந்தான்!
இந்த மண்ணுலகில் மகிழ்வாக வாழ்வதற்கு
எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம்!
ஆனால், மகிழ்வாக எல்லோரும் வாழ்கிறார்களா?
துன்ப துயரங்களில் கவலை கண்ணீரில்
கரைபவர்கள் எவ்வளவு பேர்?
சொர்க்கம் ஏன் நரகமாக இருக்கிறது?
நரகத்திலிருந்து மீள்வது எப்படி?
சொர்க்கமான இந்த மண்ணுலகில்
எல்லோரும் சொர்க்கம் காண்பதற்கு என்ன மார்க்கம்?
(சொர்க்கத்தின் பயணம் தொடரும்...)

2.

சொர்க்கம் என்பது என்ன?
சொர்க்கம் என்பது என்ன?
அது எப்படி இருக்கும்?
எப்போதும் தகிக்காத சூரியன்!
என்றும் குறையாத நிலவுகள்!
வண்ண வண்ணமாய் ஜொலிக்கும் தாரகைகள்!
வானைமுட்டும் மாட மாளிகைகள்!
வண்ண வண்ணமாய் ஜொலிக்கும்
அணையா விளக்குகள்!
எண்ணியவுடன் எண்ணிய இடத்திற்கு
செல்ல மாய ஊர்திகள்!
விரும்பியவுடன் எதிரில் வரும்
அமுத உணவுகள்!
எப்போதும் வாடாத வண்ண மலர்கள்!
எப்போதும் கெடாத இன்சுவை பழங்கள்!
எங்கெங்கும் ஒலிக்கும் இன்னிசை பாடல்கள்!
எப்போதும் ஒயாது உலாவும் தென்றல்!
வண்ணமழை பொழியும் மேகம்!
தினமும் பெய்யும் மழைகள்!
தித்திக்கும் தண்ணீர் ஊற்றுகள்!
வற்றாத ஆறுகள்!
வானிலிருந்து குதிக்கும் அருவிகள்!
எப்போதும் காயாது நிறைந்திருக்கும்
ஏரி குளங்கள்!
எங்கெங்கும் கண்கவரும் பறவைகள்!
எப்போதும் கொஞ்சுகின்ற விலங்குகள்!
கப்பல்போல் சுமந்து செல்லும்
கடல் அலைகள்!
கன்னத்தில் முத்தமிடும்
கடல் மீன்கள்!
கண்ணுக்கு தெரிய
காற்றில் மிதக்கும்
எண்ண அலை மின்னல்கள்!
அன்பு மட்டுமே நிறைந்துள்ள
நெஞ்சங்கள்!
இன்பம் மட்டுமே கொண்டுள்ள
இதயங்கள்!
மகிழ்ச்சி மட்டுமே மலருகின்ற
மனங்கள்!
என்றும் தோல்வி காணாத
காதல்கள்!
எப்போதும் கசந்து போகாத
உறவுகள்!
எப்போதும் எங்கும் ஒயாத
ஆட்டம் பாட்டங்கள்!
இருப்பதை பார்த்தோம்!
இனி இல்லாததை பார்ப்போம்!
குற்றமும் இல்லை;
சட்டமும் இல்லை!
வம்பும் இல்லை;
வழக்கும் இல்லை!
தீர்ப்பும் இல்லை;
சிறையும் இல்லை!
போரும் இல்லை;
படையும் இல்லை!
வறுமையும் இல்லை;
வருத்தமும் இல்லை!
கஷ்டமும் இல்லை;
கண்ணீரும் இல்லை!
போதையும் இல்லை;
வாதையும் இல்லை!
நோயும் இல்லை;
நொடியும் இல்லை!
நரையும் இல்லை!
திரையும் இல்லை!
மூப்பும் இல்லை!
இறப்பும் இல்லை!
சொர்க்கம் என்பது
இப்படி இருக்குமா?
எண்ணும் போதே
இனிக்கிறதல்லவா?
சொர்க்கம் பற்றி இப்படி
எத்தனையோ எண்ணங்கள்
நெஞ்சிலே மலர்ந்து
கண்ணிலே விரிகின்றன!
இந்து, இஸ்லாம், கிருத்துவம்
எல்லா மதங்களும்
சொர்க்கம் பற்றி பேசியுள்ளன.
என்ன சொல்கின்றன தெரியுமா?
(சொர்க்கத்தின் பயணம் தொடரும்...)
*******************************************************
3.
இந்துக்களின் சொர்க்கம்
இந்துக்களின் சொர்க்கம்
இந்திரன் ஆளும் தேவலோகம்!
முடிவற்ற இன்பம், சுதந்திரம்
அதுவே சொர்க்கம்!
கன்னிப் பெண்கள், தேவதைகள்,
தேவர்கள், சுவைமிகு உணவு,
தொடர் களிப்பூட்டல் இருக்கும்
இடம் சொர்க்கம்!
சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும்
ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும்
இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர்
எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில்
கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய்
ஓடிக் கொண்டிருக்கும்.
ஏரியில் நிரம்பிக் கிடக்கும்
தாமரை மலர்கள்
ஆத்மாவை வலிமைப் படுத்தும்.
மகா சக்தி வாய்ந்த
வச்சிராயுதம்! ஐராவதம் எனும்
வெள்ளை யானை!
உய்ச்சிரவம் என்ற
வெள்ளை குதிரை!
ஊர்வசி, மேனகை, ரம்பை,
திலோத்தமை போன்ற
ஆடல் அணங்குகள்!
கேட்டவை நல்கும் கற்பக தரு
மற்றும் காமதேனு என்னும் பசு!
இவையெல்லாம்
தேவலோக படைப்புகள்!
இங்கு வாழ்பவர்களுக்கு
முடிவற்ற இன்பம், சுதந்திரம்
அதுவே சொர்க்கம்!
கிருத்துவ சொர்க்கம்
விண்ணகம், விண்ணுலகம், மோட்சம், சுவனம்
போன்றவை கிருத்துவ சொர்க்கம் ஆகும்.
பூமியைச் சுற்றிக் காணப்படும்
அண்ட வெளியே
விண் அல்லது வான்!
உயரே தெரிகின்ற சூரியன்,
நிலவு, விண்மீன்கள்
அதன் உள்ளடக்கம்!
பழைய ஏற்பாட்டில்
விண்ணகம் கடவுளின் இருப்பிடம்!
அதைப் படைத்தவர் அவரே!
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர்!
படைப்புகளுக்கெல்லாம் மன்னர்!
கடவுளின் அரியணை அங்கே உண்டு!
உலகம் அவரது கால்மணை!
பாலும் தேனும் வழிந்தோடும்
நாடு அவரின் மக்களுடையது!
விண்ணிலிருந்து அடியாருக்குத்
தீர்ப்பு வழங்குவார்!
விண்ணிலிருந்து செவி சாய்த்து
மன்னிப்பார்!
மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம்
மிக உயர்ந்து இருந்தது!
வழிமுறைகளும், எண்ணங்களும்
மிக உயர்ந்திருந்தன!
புதிய ஏற்பாட்டில்
கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல்
மண்ணுலகவாசிகளைத் தேடிவரும்!
ஏழையரின் உள்ளத்தில் பேறுபெற்றோருக்கும்,
நீதியின் பொருட்டுத்
துன்புறுத்தப்படுவோருக்கும்
விண்ணரசு உரியது.
விண்ணுலகில் அவர்களுக்கு கிடைக்கும்
கைம்மாறு மிகுதியாகும்.
பகைவரிடமும் அன்பு காட்டுபவருக்கும்,
துன்புறுத்துவோருக்காக
இறைவனிடம் வேண்டுவோருக்கும்,
விண்ணகத் தந்தையாம் கடவுள்
விண்ணகத்தில் இடமளிப்பார்.
விண்ணகத்தந்தை நிறைவுள்ளவராய்
இருப்பது போல விண்ணகவாசிகளும்
நிறைவுள்ளவர்களாய் இருப்பார்கள்!
(சொர்க்கத்தின் பயணம் தொடரும்...)

********************************************************
4.

இஸ்லாமியரின் சொர்க்கம்
எந்தக் கண்ணும் பார்த்திராத,
எந்தக் காதும் கேட்டிராத,
எந்த மனிதரின் உள்ளத்திலும்
தோன்றியிராத இன்பங்கள்!
சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது.
அதன் நிழலில் விரைந்துசெல்லும்
கட்டான உடலுள்ள பயிற்சியளிக்கப்பட்ட
உயர்ரகக் குதிரையில்
நூறு வருடங்கள் பயணித்தாலும்
அதைக் கடந்து செல்லமுடியாது!
அங்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும்
சொர்க்கவாசிகள் வருவார்கள்.
அப்போது வட பருவக் காற்று வீசி
அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும்
கஸ்தூரி மண்ணை வாரிப்போடும்.
உடனே அவர்கள் மேன்மேலும்
அழகும் பொலிவும் பெறுவார்கள்.
சொர்க்கத்தில் நுழைகின்ற முதல் அணியினர்,
பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று
தோற்றமளிப்பார்கள்.
அவர்களுக்குப் பின்னே நுழைபவர்கள்,
வானில் பேரொளி வீசும்
நட்சத்திரத்தைப் போன்றிருப்பார்கள்.
அவர்களில் ஒவ்வொருவருக்கும்
இரு துணைவியர் இருப்பர்.
சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில்
உண்பார்கள்; பருகுவார்கள்.
ஆனால், அவர்கள்
மலஜலம் கழிக்கமாட்டார்கள்.
மூக்குச் சிந்தவுமாட்டார்கள்.
சளி துப்பவுமாட்டார்கள்.
அவர்கள் உண்ணும் உணவு
கஸ்தூரி மணம் கமழும்;
வியர்வை போன்று,
ஏப்பமாக வெளியேறும்.
மூச்சு விடுவதுபோன்று
இயல்பாகவே இறைவனைத்
துதித்துக்கொண்டும்
போற்றிக்கொண்டும்
இருக்குமாறு
அவர்களுக்கு
அகத்தூண்டல் ஏற்படும்.
அவர்களின் தலைவாரும் சீப்புகள்
தங்கத்தாலானவை.
அவர்களுடைய நறுமணப் புகையிடும்
தூபக் கலசங்கள்
அகில் குச்சியால் எரிக்கப்படும்.
அவர்களுடைய வியர்வையில்
கஸ்தூரி மணம் கமழும்.
அவர்கள் அனைவரது குணமும்
ஒரே மனிதரின் குணத்தைப் போன்றிருக்கும்.
அவர்கள் அறுபது முழம் உயரம்
கொண்டவர்களாயிருப்பார்கள்.
அவர்களுக்கிடையே
எந்த மன வேறுபாடும் இருக்காது.
எந்தவிதக் குரோதமும் இருக்காது.
அவர்களுடைய உள்ளங்கள்
ஒரே மனிதரின் உள்ளத்தைப்
போன்றிருக்கும்.
அவர்கள் காலையும் மாலையும்
இறைவனைத் துதிப்பார்கள்.
பொன் தட்டுகளும், கிண்ணங்களும்
அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்.
இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும்,
கண்களுக்கு இன்பம் தருவதும்
அதிலுள்ளன;
என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய
சுவனபதிகள்!
அவற்றின் கீழே ஆறுகள்
ஓடிக் கொண்டிருக்கும்;
அவர்களுக்கு அங்கு
பொன்னாலாகிய கடகங்கள்
அணிவிக்கப்படும்,
பச்சை நிற பூம்பட்டாடைகளை
அவர்கள் அணிந்திருப்பார்கள்;
அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது
சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள்;
அவர்கள் இளைப்பாறுமிடமும்
மிக அழகானது;
அவர்கள் ஒருபோதும்
நோய் வாய்ப்பட மாட்டார்கள்,
தீய மற்றும் வேதனை தரக் கூடிய
விமர்சனங்களையோ பேச்சுக்களையோ
ஒரு போதும் கேட்க மாட்டார்கள்.
அவர்கள் எப்போதும்
அழகிய மற்றும் அமைதியான பேச்சுக்களையே
கேட்பார்கள்.
அங்கு இவர்கள் வீணானதையும்,
பாவமுண்டாக்குவதையும்
செவியுற மாட்டார்கள்.
‘ஸலாம், ஸலாம்’ என்னும் சொல்லையே
செவியுறுவார்கள்.
சுவர்க்கத்திலே ஒருவருக்கொருவர்
வெருப்புக்களோ, மனக்கசப்புக்களோ
அடைய மாட்டார்கள்.
அவர்களுடைய இதயங்கள்
ஒன்றுபோல இருக்கும்.
அவர்கள் இறைவனை
காலையிலும், மாலையிலும்
புகழ்ந்து கொண்டிருப்பார்கள்”
சொர்க்கவாசிகளின் இதயங்கள்
சுத்தமானதாகவும்,
அவர்களுடைய பேச்சுக்கள் அழகாகவும்,
அவர்களுடைய செயல்கள்
சரியானதாகவும் இருக்கும்.
அங்கே தீங்கு தரக்கூடிய,
வேதனை ஏற்படுத்தக் கூடிய,
கோப மூட்டக் கூடிய
பேச்சுக்கள் இருக்காது.
(சொர்க்கத்தின் பயணம் தொடரும்...)



********************************************************
5.

உட்டோபியா என்னும் சொர்க்கம்!
மண்ணுலகில் சொர்க்கம் விரும்புகிறீர்களா?
அதோ அங்கொரு சொர்க்கம்;
அதன் குடிமக்கள் உயர்வான விரும்பத்தக்க
பரிபூரண குணங்களை உடையவர்கள்!
அது எந்தவொரு பிரச்சனையும் இல்லாத
ஒரு நிறைவான இடம்!
அங்கு உள்ளது இயற்கை சார்ந்த வாழ்வு!
இயற்கையை அழிக்கும் பெரும் தொழில் சார்ந்த
வாழ்வு அல்ல!
அங்கு பணம் இல்லை! ஊதியம் இல்லை!
ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை!
சமூகம், பொருளாதாரம், அரசியல்
அனைத்திலும் சமத்துவம்!
விரும்பிய கல்வி அனைவருக்கும் உண்டு!
இயன்ற வேலைகளை செய்யலாம்!
பொது நலனுக்கு ஒவ்வொருவரும்
இயன்ற பணிகளைச்செய்வதை
உயிர்போன்ற கடமையாக கொண்டுள்ளனர்!
தேவையான பொருட்களை பெறலாம்!
இல்லையென்ற வார்த்தை அங்கில்லை!
பணிசெய்தல் போக கலையிலும், விளையாட்டிலும்,
அறிவியல் ஆய்விலும் ஈடுபட நிறையநேரம் உண்டு!
சண்டை சச்சரவுகள் எங்கும் இல்லை!
காவல் இல்லை!
களவு இல்லை!
பகை இல்லை!
படை இல்லை!
வழக்கும் இல்லை!
நீதிமன்றமும் இல்லை!
போர் என்பதை யாரும் கண்டதில்லை!
யாதும் ஊரே யாவரும் கேளிர்!
அன்பே அவர்கள் வாழ்க்கை தத்துவம்!
சாதி மத பேதங்கள் இல்லை!
ஒன்றே குலம் ஒருவனே தேவன்!
பெயர்கள் வேறானாலும், வழிகள் வேறானாலும்,
அன்பு, அமைதி, ஆனந்தம் என்பதே
அனைவரின் கொள்கை!
அறிவியல் மனித மேம்பாட்டிற்கு உதவியாக இருக்கும்!
இறக்கை கட்டி வானில் பறக்கலாம்!
பறவைகளோடு பந்தயம் போகலாம்!
எண்ணங்களால் பேசலாம்!
நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு போகலாம்!
நோயில்லை துன்பமில்லை!
வாழ்வை விரும்பி துறப்பதைத்தவிர இறப்பில்லை!
விரும்பினால் மட்டுமே பிறப்புண்டு!
பெண்தான் குழந்தை பெறவேண்டுமென்றில்லை!
அதற்கு தனியே இயந்திரம் உண்டு!
ஆண் பெண் பேதமில்லை!
திருமணம், குடும்பமில்லை!
விருப்புபவர்கள் சேர்ந்து வாழலாம்!
எப்படி உள்ளது இந்த சொர்க்கம்?
தென் அமெரிக்காவிற்கு தெற்கே
தென் அட்லாண்டிக் கடலில்
ஒரு தீவில் உள்ளதாம் இப்படியொரு உலகம்!
அதன் பெயர் உட்டோபியா
உண்மையென்று எண்ணி விடாதீர்!
சா் தாமஸ் மூர் என்பவர் படைத்த
கற்பனை உலகு அது!

(சொர்க்கத்தின் பயணம் தொடரும்...)

********************************************************





No comments:

Post a Comment

6.  கம்பன் காட்டும் சொர்க்கம் இராமாயணம் படைத்த கம்பருக்கும் சொர்க்கத்தின் கனவு இருந்தது ! மண்ணுலகில் ஒரு சொர்க...