- 6.
- கம்பன் காட்டும் சொர்க்கம்
- இராமாயணம் படைத்த கம்பருக்கும்
- சொர்க்கத்தின் கனவு இருந்தது!
- மண்ணுலகில் ஒரு சொர்க்கத்தை
- படைத்துக்காட்டுகிறார்!
- கம்ப இராமாயண
- பால காண்ட
- நாட்டு படலத்தில்
- ஒரு 60 பாடல்களில்
- தசரதன் ஆண்ட
- இராமர் பிறந்த
- கோசல நாட்டை
- மண்ணுலக சொர்க்கமென
- படைத்துக்காட்டுகிறார்!
- அவர் படைத்த பாடல்கள்
- அத்தனையும் சொக்கத்தங்கம்!
- அலை அலையாய் எழுந்து
- ஆனந்தமாய் இசைக்கும் சந்தம்!
- அவர் படைத்த சொர்க்கத்தின்
- அழகிற்காக புகழ்வதா?
- அவர் வடித்த அற்புத
- வரிகளுக்காக புகழ்வதா?
- எதை புகழ்வது என்று
- எனக்கு புரியவில்லை!
- மது உண்ட வண்டுபோல்
- மயங்கிக் கிடக்கிறேன்!
- மானுட வாழ்வைமட்டும்
- சொல்லவில்லை!
- ஆறுகள், மலைகள்,
- காடுகள், வயல்கள்
- செடிகள் கொடிகள்
- மரங்கள் மயில்கள்
- மான்கள் மீன்கள்
- வேலைகள் ஆலைகள்
- வளங்கள் நலங்கள்
- குணங்கள் மனங்கள் என
- எல்லாவையும் கண்முன்னே
- காட்சியாக விரிக்கின்றார்!
- கற்பனை தேரிலே ஏற்றி
- கனவிலே மிதக்க வைக்கின்றார்!
- அவர் படைத்ததில் பாதியைதான்
- நான் இங்கு
- உங்கள் ரசனைக்கு பகிர்கின்றேன்!
- இனி வருவனவற்றில்
- என் வரிகள் எதுவுமில்லை!
- கம்பன் படைத்த கவிதைக்கு
- யாரோ ஒரு கொம்பன்
- கொடுத்த உரைநடை!
- இரண்டையும் உங்கள்முன்
- வைக்கின்றேன்!
- நீங்களே அள்ளி பருகுங்கள்!
- ஆனந்தம் கொள்ளுங்கள்!
- மண்ணுலக சொர்க்கம்
- மீண்டும் வருமா என்ற
- ஏக்கம் வரும் என்றுமட்டும்
- நான் இங்கு ஓங்கி சொல்லுவேன்!
- கம்ப இராமாயணத்தின்மீது
- உங்களுக்கு உடனே
- ஒரு காதல் வரும் என்றுமட்டும்
- துணிந்து சொல்லுவேன்!
- இதோ உங்கள்முன்
- வைக்கின்றேன்!
- நீங்களே அள்ளி பருகுங்கள்!
- ஆனந்தம் கொள்ளுங்கள்!
- இன்னும் நான் உங்களுக்கு
- இங்கு எதற்கு தடை?
- இப்போதே சொல்லுகின்றேன்
- இன்பந்தரும் விடை!
- -------------------------------------------------------------------
- வரம்பு எலாம் முத்தம்; தத்தும் மடை எலாம் பணிலம்; மா நீர்க்
- குரம்பு எலாம் செம்பொன்; மேதிக் குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
- பரம்பு எலாம் பவளம்; சாலிப் பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
- கரும்பு எலாம் செந் தேன்; சந்தக் கா எலாம் களி வண்டு ஈட்டம்.
- (கம்ப-பால-நாட்டு-2)
- என்ன அருமையான சந்தம்! கம்பனின் வரிகள் எல்லாம் அமுதம்!
- வரப்பு எல்லாம் முத்து.
- மடை எல்லாம் சங்கு.
- ஈரநிலம் எல்லாம் பொன்.
- எருமைக் குழி எல்லாம் கழுநீர்ப் பூக்கள்.
- நீர்க்கரை எல்லாம் பவளம்.
- நெல்வயல் எல்லாம் அன்னம்.
- கரும்பு எல்லாம் தேன்கூடு.
- சந்தனக் காடு எல்லாம் மகிழ் வண்டுகள்.
- ஆறு பாய் அரவம், மள்ளர் ஆலை பாய் அமலை, ஆலைச்
- சாறு பாய் ஓதை, வேலைச் சங்கின் வாய்ப் பொங்கும் ஓசை,
- ஏறு பாய் தமரம், நீரில் எருமை பாய் துழனி, இன்ன
- மாறு மாறு ஆகி, தம்மில் மயங்கும்-மா மருத வேலி.
- (கம்ப-பால-நாட்டு-3
- கம்பன் கவிதை காதில் பாய்ந்தால்
- இன்பம் மனதில் எப்படி பாய்கிறது!
- ஆறு பாயும் ஓசை.
- உழவர் கரும்பாலையில் பாயும் ஆரவாரம்.
- கரும்புச்சாறு பாயும் ஓசை.
- கடலில் சங்கு வாய் பொங்கும் ஓசை.
- காளைகள் முட்டி பாயும் முனைப்பு.
- நீரில் எருமை பாயும் மகிழ்ச்சி.
- இப்படி மாறி மாறி பாய்ந்து,
- மயங்கும் மருதநிலம்.
- தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
- கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
- தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
- வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ.
- (கம்ப-பால-நாட்டு-4)
- என்ன அழகிய காட்சி?
- இன்பத்திற்கு இதுவன்றோ சாட்சி?
- மருதம் என்னும் சோலையில்
- மயில்கள் ஆட,
- தாமரை அதற்கு
- விளக்கு தாங்க,
- மேகங்கள் இடி முழங்க,
- குவளைமலர்கள் கண்விழித்து பார்க்க,
- நீரலைகள் ஆட்டத்துக்குத் திரையாக,
- தேன் உண்ட வண்டுகள் மகரயாழ் இசைக்க,
- மருதம் மகிழ்ச்சி கொண்டதன்றோ!
- (நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி;
- தாரிடை உறங்கும் வண்டு; தாமரை உறங்கும் செய்யாள்;
- தூரிடை உறங்கும் ஆமை; துறையிடை உறங்கும் இப்பி;
- போரிடை உறங்கும் அன்னம்; பொழிலிடை உறங்கும் தோகை.)
- (கம்ப-பால-நாட்டு-6)
- இன்ப துய்ப்பில் பொங்கும் உறக்கம்!
- இக்கவிதை பயின்றால் வாராதோ மயக்கம்!
- நீரில் உறங்கும் சங்கு,
- நிழலில் உறங்கும் எருமை,
- தாமரையில் உறங்கும் திருமகள்,
- புதரில் உறங்கும் ஆமை,
- நீர்த்துறைகளில் உறங்கும் சிப்பி,
- வைக்கோல் போரில் உறங்கும் அன்னம்,
- சோலையில் உறங்கும் மயில்கள்!
- (ஆலைவாய்க் கரும்பின் தேனும், அரி தலைப் பாளைத் தேனும்,
- சோலை வீழ் கனியின் தேனும், தொடை இழி இறாலின் தேனும்,
- மாலைவாய் உகுத்த தேனும்,-வரம்பு இகந்து ஓடி வங்க
- வேலைவாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ.)
- (கம்ப-பால-நாட்டு-9)
- கம்பன் கவித்தேன் மலைத்தேன் சுவைத்தேன்
- களித்தேன் காண வந்த வேலையை மறந்தேன்!
- ஆலையில் பிழியும் கரும்புத்தேன்,
- பாளையில் இறங்கும் கள்ளெனும் தேன்,
- சோலையில் விழும் பழத்தேன்,
- கட்டு உடைந்து கொட்டும்
- தேன் கூட்டுத் தேன்,
- மக்கள் அணிந்திருக்கும்
- மாலைகளில் வழியும் தேன்;
- இவை எல்லாம் பெருக்கெடுத்து
- வங்கக் கடலில் கலக்கும் தேன்!
- மீன்கள் எல்லாம் உண்டு களிக்கும் தேன்!
- வெண் தளக் கலவைச் சேறும், குங்கும விரை மென் சாந்தும்,
- குண்டலக் கோல மைந்தர் குடைந்த, நீர்க் கொள்ளை சாற்றின்,
- தண்டலைப் பரப்பும் சாலி வேலியும் தழீஇய வைப்பும்,
- வண்டல் இட்டு ஓட மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ.
- (கம்ப-பால-நாட்டு-12
- பூவில் தேனீ மொய்க்கும்!
- கம்பன் பாவில் கண்ணும் மனமும்
- காலமெல்லாம் மொய்க்கும்!
- குண்டலம் பூண்ட கோலத்துடன்
- மைந்தர் நீராடும்போது
- அவர்கள் பூசிய
- வெண்ணிறக் கலவைக் குழம்பும்,
- மணக்கும் சந்தனமும்,
- கலந்த நீர் பாய்ந்து
- சோலையும் மண்ணும் மணப்பதால்
- வண்டுகள் மொய்க்கும் போது,
- மது உண்ட வண்டாய் ஆடவர் மொய்ப்பரன்றோ?
- பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்,
- பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,
- மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்,
- விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்;
- (கம்ப-பால-நாட்டு-15)
- கம்பன் கவிதைக்கு இல்லை சரிவு!
- இன்பக்களிப்புக்கு இல்லை முடிவு!
- விரும்பும் மகளிரோடு விரும்பித் தழுவியும்,
- பருந்து பறக்க நிழல் பறப்பது போல
- இயல் இசை இரண்டையும் துய்த்தும்,
- மருந்து போல் உதவும் சொற்களைக் கேட்டும்,
- விருந்தினர் முகத்தைக் கண்டது போல்
- விழாக் கொண்டாடியும்
- மக்கள் பொழுது போக்கினரன்றோ?
- கறுப்புறு மனமும், கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி,
- உறுப்புறு படையின் தாக்கி, உறு பகை இன்றிச் சீறி,
- வெறுப்பு இல,களிப்பின் வெம் போர் மதுகைய, வீர ஆக்கை
- மறுப்பட, ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும்;
- (கம்ப-பால-நாட்டு-16)
- போர் இல்லையென்றால் வீரனுக்கு என்ன வேலை?
- காட்டுகிறது அதனை கம்பன் கவிச்சோலை!
- நெஞ்சில் உறுதியும், கண்ணில் சிவப்பும் காட்டி,
- பகைமை இல்லா படைக்கலம் போல
- ஒருவரை ஒருவர் தாக்கிப்
- பயிற்சி செய்துகொள்ளும்
- வீரர்களின் வாழ்க்கை
- கோழிப் போர் போல் காணுமன்றோ?
- முள் அரை முளரி வெள்ளை முளை இற, முத்தும் பொன்னும்
- தள்ளுற, மணிகள் சிந்த, சலஞ்சலம் புலம்ப, சாலில்
- துள்ளி மீன் துடிப்ப, ஆமை தலை புடை கரிப்ப, தூம்பின்
- உள் வரால் ஒளிப்ப, -மள்ளர் உழு பகடு உரப்புவாரும்;
- (கம்ப-பால-நாட்டு-18)
- வயலின் வளம் காட்டும் கண்காட்சி!
- கம்பன் திறன் காட்டும் சொல்லாட்சி!
- உழவர்கள் உழும் எருதுகளை
- அதட்டிக்கொண்டு ஓட்டினர்.
- அவர்கள் உழும்போது
- முள்ளுத் தாமரையின்
- வெள்ளை நிற முளைகள்
- அறுந்து போயின.
- முத்தும் பொன்னும் மணிகளும் சிந்தின.
- வயலில் கிடக்கும் சங்குகள் ஒலித்தன.
- மீன்கள் துள்ளித் துடித்தன.
- ஆமைகள் முதுகைச் சொரிந்துகொண்டன.
- வரால் மீன்கள் ஓடி ஒளிந்துகொண்டன.
- எறிதரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள்
- குறிகொளும் போத்தின் கொல்வார்; கொன்ற நெல் குவைகள் செய்வார்;
- வறியவர்க்கு உதவி, மிக்க, விருந்து உண மனையின் உய்ப்பார்,
- நெறிகளும் புதைய, பண்டி நிறைத்து, மண் நெளிய ஊர்வார்.
- (கம்ப-பால-நாட்டு-20)
- கதிர் படு வயலின் உள்ள, கடி கமழ் புனலின் உள்ள,
- முதிர் பயன் மரத்தின் உள்ள, முதிரைகள் புறவின் உள்ள,
- பதிபடு கொடியின் உள்ள, படி வளர் குழியின் உள்ள,
- மதுவளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார்.
- (கம்ப-பால-நாட்டு-21)
- சுழன்றும் ஏர் பின்னது உலகு என்பதை
- எடுத்துக்காட்டும் கம்பன் கவிதை!
- நெல்லை அறுத்துக் கொண்டுவந்து
- களத்தில் போர் அடிப்பர்.
- நெல்லை வறியவர்களுக்கு வழங்குவர்.
- விருந்தினர் உண்ண வேண்டும் என்று
- வண்டிகளில் ஏற்றி மண்ணே நெளியுமாறு
- வீட்டுக்குக் கொண்டுவருவர்.
- விளைவயல், பொழில், பழுத்த மரங்கள்,
- முல்லை நிலத்துத் துவரை,
- பதியக் கொடியின் காய்கள்
- ஆகியவற்றை மலரிலுள்ள தேனைக்
- கொண்டு செல்லும் வண்டுகள் போல
- உழவர்கள் கொண்டுவருவர்.
- (தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும்,
- ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும்,
- தேயும் நுண் இடை சென்று வணங்கவும்,
- ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்.)
- (கம்ப-பால-நாட்டு-28)
- (வள்ளி கொள்பவர் கொள்வன மா மணி;
- துள்ளி கொள்வன தூங்கிய மாங்கனி;
- புள்ளி கொள்வன பொன் விரி புன்னைகள்;
- பள்ளி கொள்வன பங்கயத்து அன்னமே.)
- (கம்ப-பால-நாட்டு-33)
- நாட்டு வளத்தை காட்டும் கவிதைகள்
- ஏட்டிலும் பாட்டிலும் இறவாத விதைகள்!
- தயிர் கடையும் மத்தொலி கேட்கும்.
- கடையும் கையிலுள்ள வளையல்
- வாய் விட்டு அலறும்.
- நுண்ணிய இடை வளையும்.
- இதனால் ஆய்ச்சியர் வருந்துவர்.
- வள்ளிக் கிழங்கு தோண்டுபவர்
- மணிகளைப் பெறுவர்.
- மாம்பழங்களைத் துள்ளிக் குதித்துப் பறிப்பர்.
- புன்னை மரங்கள் புள்ளி புள்ளியாகப் பூக்கும்.
- தாமரையில் அன்னம் உறங்கும்.
- பெருந் தடங் கண் பிறைநுதலார்க்கு எலாம்,
- பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
- வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்,
- விருந்தும் அன்றி விளைவன யாவையே?
- (கம்ப-பால-நாட்டு-36)
- செல்வமும் கல்வியும் மகளிர் எய்தினால்
- நிலவும் நிலையை அன்றே நிறுவிய
- கம்பனின் கவித்திறன் என்னே என்ப!
- மகளிர்க்கு அவர்களின் கண்களைப் போல
- செல்வமும் கல்வியும் பூத்தன.
- அதனால் வருந்த வந்தவர்களுக்கெல்லாம்
- வழங்குவதும், நாள்தோறும் விருந்தோம்புதலும் அன்றி
- வேறு விருப்பம் இல்லாதவர்களாக
- அவர்கள் இருந்தனர்.
- கலம் சுரக்கும் நிதியம்; கணக்கு இலா
- நிலம் சுரக்கும் நிறை வளம்; நல் மணி
- பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
- குலம் சுரக்கும், ஒழுக்கம்-குடிக்கு எலாம்.
- (கம்ப-பால-நாட்டு-38)
- எத்தனை சுரக்கும் இன்ப சுரங்கம்!
- பித்தினை ஆக்கும் கவி அரங்கம்
- கப்பல் நிதியத்தையும்,
- நிலம் வளத்தையும்,
- நிலத்தடி மணிகளையும்,
- மக்கள் குலம் குடிமக்களுக்கு
- ஓழுக்கத்தையும் சுரந்தன.
- கூற்றம் இல்லை ஓர் குற்றம் இலாமையால்;
- சீற்றம் இல்லை தம் சிந்தையின் செம்மையால்;
- ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால்,
- ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே.
- (கம்ப-பால-நாட்டு-39)
- இப்படி ஒரு உலகம் உண்டானால்,
- சொர்க்கத்தின் வாசல் திறக்குமன்றோ?
- நாட்டில் குற்றமே இல்லாததால்
- தண்டனை என்பதே இல்லை.
- எண்ணங்கள் செவ்விதாக இருப்பதால்
- யாரிடமும் சினமே இல்லே.
- ஆற்றல் மிக்க நல்லறம் அல்லது
- அல்லறம் இல்லாமையால்
- உயர்வோ இழிவோ யாருக்கும் இல்லை.
- விதியினை நகுவன அயில் விழி; பிடியின்
- கதியினை நகுவன அவர் நடை; கமலப்
- பொதியினை நகுவன புணர் முலை,கலை வாழ்
- மதியினை நகுவன வனிதையர் வதனம்.
- (கம்ப-பால-நாட்டு-44)
- வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்!
- காயும் உடனே கனியும் கவிகேட்டுவிட்டால்!
- விதியைப் பார்த்து
- உழத்தியர் விழிகள் சிரித்தன.
- கதியைப் பார்த்து
- அவர்களின் நடை சிரித்தது.
- தாமரை மொட்டைப் பார்ந்து
- அவர்களின் தனங்கள் சிரித்தன.
- கலை நிறைந்த நிலவைப் பார்த்து
- அவர்களின் முகம் சிரித்தது.
- பகலினொடு இகலுவ படர் மணி; மடவார்
- நகிலினொடு இகலுவ நளி வளர் இளநீர்;
- துகிலினொடு இகலுவ சுதை புரை நுரை; கார்
- முகிலினொடு இகலுவ கடி மண முரசம்.
- (கம்ப-பால-நாட்டு-45)
- போட்டி என்றால் கூட்டும் பரவசந்தான்!
- பாட்டு என்றால் அது கம்பன் கவிரசந்தான்!
- அவர்கள் அணிந்திருந்த மணிகள்
- பகலோடு போட்டி போட்டுக்கொண்டன.
- அவர்களின் தனங்களோடு
- இளநீர் போட்டியிட்டது.
- நீரில் நின்ற வெள்ளை நுரை
- அவர்களின் ஆடையோடு போட்டியிட்டது.
- அவர்களின் மண முரசம்
- முழங்குவது போல இடி முழங்கியது.
- காரொடு நிகர்வன கடி பொழில்; கழனிப்
- போரொடு நிகர்வன புணர்மலை; அணை சூழ்
- நீரொடு நிகர்வன நிறை கடல்; நிதி சால்
- ஊரொடு நிகர்வன இமையவர் உலகம்.
- (கம்ப-பால-நாட்டு-46)
- ஒப்பில்லை உயர்வில்லை தப்பில்லை தளர்வில்லை!
- கம்பன் பாட்டிற்கு முன்நிற்க எதுவும் வரவில்லை!
- கார் மேகமும் பொழிலும்
- ஒப்பாய் நின்றன.
- உழவர் கழனியில் இட்ட போரும்
- இமய மலையும்
- ஒப்பாகத் தோன்றின.
- வயலிலுள்ள நீரும் கடலும்
- ஒப்பாகத் திகழ்ந்தன.
- இங்குள்ளவரின் செல்வ வளம்
- மிக்க ஊரும் வானுலகமும்
- ஒப்பாகத் தோன்றின.
- நெல் மலை அல்லன நிரை வரு தரளம்;
- சொல் மலை அல்லன தொடு கடல் அமிர்தம்;
- நல் மலை அல்லன நதி தரு நிதியம்;
- பொன் மலை அல்லன மணி படு புளினம்.
- (கம்ப-பால-நாட்டு-47)
- நிலம் என்றால் இது நிலம்!
- வளம் என்றால் இது வளம்!
- இது நெல் மலை அல்ல!
- அதுபோலுள்ள இதுவென்ன?
- இது கடலோரத்தில் குவிந்திருக்கும்
- முத்துக் குவியல் தான்!
- இது வாயில் வரும் சொல் மலை அல்ல!
- அதுபோலுள்ள இதுவென்ன?
- பாற்கடலில் தோன்றிய அமிழ்தந்தான்!
- இது உண்மையான மலை அல்ல!
- அதுபோலுள்ள இதுவென்ன?
- அந்த நாட்டு ஆறுகள் கொண்டுவந்த
- நிதிக் குவியல்தான்!
- இது பொன் மலை அல்ல!
- அதுபோலுள்ள இதுவென்ன?
- இது மணிகள் குவிந்து கிடக்கும்
- மணல் குவியல் தான்!
- பந்தினை இளையவர் பயில் இடம் மயில் ஊர்
- கந்தனை அனையவர் கலை தெரி கழகம்;
- சந்தன வனம் அல, சண்பக வனம் ஆம்;
- நந்தன வனம் அல, நறை விரி புறவம்;
- (கம்ப-பால-நாட்டு-48)
- இளைஞர் விளையாடும் களம்
- இன்பம் தரும் வளம்!
- இளைஞர் பந்தாடும் இடம்
- மயிலில் ஊர்ந்து செல்லும்
- முருகனைப் போன்றவர்
- கலைகளைப் பயிலும் இடமாகும்.
- அங்கு உள்ளவை
- சந்தன வனம் அன்று;
- சண்பகப் பூ பூத்துக்கிடக்கும் வனம்.
- அங்கு இருப்பவை நந்தவனம் அல்ல,
- மணம் கமழும் முல்லை நிலம்.
- கோதைகள் சொரிவன குளிர் இள நறவம்;
- பாதைகள் சொரிவன பரு மணி கனகம்;
- ஊதைகள் சொரிவன உறை உறும் அமுதம்;
- காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள்;
- (கம்ப-பால-நாட்டு-51)
- இன்பம் சொரிவது கம்பன் பாட்டு!
- இல்லை மாற்று என்றே சாற்று!
- மாலைகள் சொரிவது தேன்.
- பாதை வழிகள் சொரிவது மணிக்கற்கள்.
- ஊதைகள் (வாடைக் காற்று) சொரிவது
- உறையும் நீர்த்துளி.
- சொல்லும் காதைப் பாட்டு சொரிவது
- காதுக்கு உகந்த கனிகள்.
- வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்;
- திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்;
- உண்மை இல்லை பொய் உரை இலாமையால்;
- வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்.
- (கம்ப-பால-நாட்டு-53)
- சொர்க்கம் இதுதான் என்று சொல்ல
- இதுவன்றோ காரணம்:
- இங்கிதுவெல்லாம் இனியாவது
- இனிதே மாறணும்!
- கோசல நாட்டில் வள்ளண்மை இல்லை;
- காரணம் வறுமையுற்று வாங்குவோர் இல்லை!
- வலிமை இல்லை;காரணம் போரிடுவோர் இல்லை!
- உண்மை இல்லை;காரணம் பொய்யே இல்லை!
- அறியாமை என்னும் வெண்மை இல்லை;
- காரணம் பல நல்லனவற்றை மக்கள் சொல்வதால்!
- கூறு பாடலும், குழலின் பாடலும்,
- வேறு வேறு நின்று இசைக்கும் வீதிவாய்,
- 'ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம்' என,
- சாறும் வேள்வியும் தலைமயங்குமே.
- (கம்ப-பால-நாட்டு-56)
- எத்தனை பாடல், எத்தனை பாடல்?
- அத்தனையும் கம்பன் புகழ் பாடும்!
- வாயில் வரும் பாட்டும்,
- குழலில் வரும் பாட்டும்
- வெவ்வேறு தெருக்களில் இசைக்கும்.
- இவை ஆறும் ஆறும் எதிர்த்துக்கொண்டு
- ஒன்று கலப்பது போல
- ஊரில் திருவிழாவும்,
- வேள்வியும் ஆங்காங்கே நிகழும்.
- மூக்கில் தாக்குறும் மூரி நந்தும்; நேர்
- தாக்கின் தாக்குறும் பறையும், தண்ணுமை
- வீக்கின் தாக்குறும் விளியும், -மள்ளர்தம்
- வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே.
- (கம்ப-பால-நாட்டு-57)
- சங்கு முழங்க பறை அதிர தினம்
- பொங்கும் பாடல் தங்கும் மனம்!
- மூக்கில் வாய் வைத்து ஊதும் சங்கு,
- அடித்துத் தாக்கும் பறை,
- உரசித் தாக்கும் தண்ணுமை
- ஆகியவற்றின் ஒலிகள்
- உழவர் ஒலியில் அடங்கிப் போகும்.
- (பொற்பின் நின்றன பொலிவு; பொய் இலா
- நிற்பின் நின்றன நீதி; மாதரார்
- அற்பின் நின்றன அறங்கள்; அன்னவர்
- கற்பின் நின்றன கால மாரியே.)
- (கம்ப-பால-நாட்டு-59)
- அன்பும், பண்பும் அறமும் நிறைந்தால்
- அதனினும் சொர்க்கம் வேறு உளதோ?
- பொன்னைப் போன்ற பண்பில்
- பொலிவு நிற்கும்.
- பொய்மை இல்லாத நடத்தையில்
- நீதி நிற்கும்.
- மகளிர் அன்பில்
- அறநெறி நிற்கும்.
- மகளிர் கற்பில்
- பருவ மழை நிற்கும்.
- (சொர்க்கத்தின் பயணம் தொடரும்...)
- ********************************************************************************
- ********************************************************************************
மண்ணுலகே சொர்க்கம்
Sunday, May 6, 2018
Subscribe to:
Posts (Atom)
6. கம்பன் காட்டும் சொர்க்கம் இராமாயணம் படைத்த கம்பருக்கும் சொர்க்கத்தின் கனவு இருந்தது ! மண்ணுலகில் ஒரு சொர்க...